மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில், மரண தண்டனையை மீண்டும் அமுல்டுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் அழகிப் போட்டிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இராணுவ ஆட்சியின் கீழ் இயங்கும் இந்த நாட்டில், அதிபர் இப்ராஹிம் ட்ரொரே தலைமையிலான அரசின் முடிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்ட மரண தண்டனையை மீண்டும் கொண்டுவரும் புதிய குற்றவியல் சட்டத்திற்கு, பாராளுமன்றத்தின் 71 உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்துள்ளனர்.
இதன்படி, பயங்கரவாதம், உளவு பார்த்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட சில கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் காலாவதியான அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், கடந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் அழகிப் போட்டிகளை நடத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அழகிப் போட்டிகள் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சமூக விழுமியங்கள் மற்றும் மனித மாண்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதற்காகப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இளம் பெண்களின் அறிவியல் மற்றும் கல்வித் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளை மையமாகக் கொண்ட போட்டிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், மரண தண்டனையை மீண்டும் கொண்டுவரும் முடிவுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது நீதித்துறையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகள் தொடர்பான கவலைகளை அதிகரிக்கக்கூடும் எனவும் அவை எச்சரித்துள்ளன.
பாதுகாப்பு, கலாசாரம், மனித உரிமைகள் எனப் பல்வேறு தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவுகள், புர்கினா பாசோவின் அரசியல் மற்றும் சமூகப் போக்கில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன.








