கனமழையைத் தொடர்ந்து மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், நாவலப்பிட்டிய – பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் கித்துள்கொட்டேவ, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தர ஓவிட்ட உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பஸ்பாகே கோரளை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாவலி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து அவதானிக்குமாறும், தேவையேற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டிய நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும், நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









