யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் ‘போராட்டம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா தயாரித்துள்ளதுடன், ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ரீகன் கந்தையா கதாநாயகனாக நடிக்க, நிவேதிகா ராசையா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், இளைஞர்களின் கனவுகள், குடும்பம், காதல், நட்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் கதைக்களத்தைக் கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
திரைப்படத்தில் இடம்பெறும் ‘முட்டக் கண்ணைக் காட்டி என்னைப் பத்து வச்சா’ ’ என்ற காதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பாடலுக்கு பொத்துவில் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். தயாஸ் மோகன்தாஸ் மற்றும் அக்சலா நாதகோபால் இணைந்து பாடியுள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவில் திரைப்படத்துடன் தொடர்புடைய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். யாழ் மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படத்திற்கு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
இந்நிலையில், ‘போராட்டம்’ திரைப்படம் 2026 ஒக்டோபர் 2ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.








