கொழும்பில் நடைபெற்ற 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்லஸ் சிசி அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், கொழும்பு சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 20ஆம் திகதி போட்டித் தொடர் நடைபெற்றது.
மலையகத்தின் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் நோக்கத்துடனும், ருக்மணி அம்மாளின் நினைவைப் போற்றும் வகையிலும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு போட்டியில் மொத்தம் 39 அணிகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தின.
இறுதிப் போட்டியில் அட்லஸ் சிசி மற்றும் யுவர்போய்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய அட்லஸ் சிசி அணி, நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து 67 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய யுவர்போய்ஸ் அணி, 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்மூலம் அட்லஸ் சிசி அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்று, 2026ஆம் ஆண்டுக்கான ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.
தொடரின் சிறந்த வீரராக யுவர்போய்ஸ் அணியின் ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக யுவர்போய்ஸ் அணியின் சங்கரும், சிறந்த பந்துவீச்சாளராக அட்லஸ் சிசி அணியின் ரமேஷும் தெரிவு செய்யப்பட்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்சா, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், வெற்றியாளர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார்.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விளையாட்டு நிகழ்வு, விளையாட்டையும் சமூகப் பணியையும் ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.








