மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்தப் பிரச்சினை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி விடயங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.









