திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, மும்பை அணி வெற்றிகொண்டுள்ளது. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த மும்பை அணிக்கும், மும்பை ரசிகர்களுக்கும் நேற்றைய வெற்றி பாரிய உத்வேகத்தை அளித்துள்ளது.
அஹமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐபீஎல் தொடரின் 30 ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆரம்பத்தில் மும்பை அணி விக்கட்டுகளை இழந்து தடுமாறியபோதும் பின்னர் அதிரடியை வெளிப்படுத்தியது.
திலக் வர்மா 45 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் சந்தித்த முதல் 22 பந்துகளில் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், அதன் பின்னர் சந்தித்த 23 பந்துகளில் 82 ஓட்டங்களை அவர் குவித்தார்.
மும்பை அணிக்காக ஐபீஎல் வரலாற்றில் வீரர் ஒருவர் வேகமாக பெற்றுக்கொடுத்த சதமாகவும், குறித்த சதம் அமைந்தது. இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய 45 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்நிலையில் 200 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறியதோடு, விக்கட்டுகளை வேகமாக பறிகொடுத்தது.
இறுதியில் 15.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது
இதுவரை மும்பை விளையாடிய போட்டிகளில் விக்கட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறிவந்த ஜஸ்பிரிட் பும்ரா, முதல் பந்திலேயே விக்கட்டை வீழ்;த்தினார். அஷ்வானி குமார் மும்பை அணியின் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கி 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 4 தோல்விகளுக்கு பிறகு மும்பை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. குஜராத் அணியை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக 3 வெற்றியை பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது.









