பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தின் மத்திய பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் லயன் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலால் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஏனைய 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தீவிபத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் குறித்த வீடுகளில் தங்கியிருந்தவர்கள் டன்சினன் தோட்ட மத்திய பிரிவிலுள்ள மண்டபமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளில் காணப்பட்ட பெறுமதியான பொருட்களும், ஆவணங்களும் தீயினால் அழிவடைந்துள்ளதாகவும், பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டமையினால் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









