மாத்தறை நில்வலா கங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உவர் நீர் தடுப்பினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்க ஜனாதிபதி செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் நீர்ப்பாசன மற்றும் வடிகானமைப்பு சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
நில்வலா கங்கையில் உவர் நீர் தடுப்பு நிர்மானிக்கபட்டுள்ளதால் வெள்ள நிலைமை மற்றும் விவசாய நிலங்களுக்குள் உவர்நீர் உற்புகும் நிலை ஏற்படுகின்றமை அதற்கான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவது முறையான ஆய்வுக்குப் பின்னரே செய்யப்பட வேண்டுமெநும் உரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெறுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஜனாதிபதி செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வை வழங்குமாறும் அதன்பின்னர் பணிகளை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் குறித்த வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு மாத்தறை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள நிலமைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.








