நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையின் நிறைவேற்றுத் தரம் அல்லாத ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள் கடந்த 8ம் மற்றும் 9ம் திகதிகளில் சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
கடுமையான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்நோக்கியிருந்த நாடு கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான பொருளாதார கொள்கை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கியது.
தற்போதைய நிதி நிலைமையில் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போது வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பையோ கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு சாத்தியமில்லை என திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.









