தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் தனது 91ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் அவர் காலமானார்.
கடந்த 1933ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி திருகோணமலையில் பிறந்த சம்பந்தன் , யாழ்ப்பாணம் சென் பெட்ரிக்ஸ் கல்லூரி, மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்றுள்ளார்.
தொழிற்துறை சட்டத்தரணியான இரா. சம்பந்தன், கடந்த 1977ம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
தொடர்ச்சியாக 7 தடவைகள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட இரா. சம்பந்தன் ஒரே ஒரு தடவை மாத்திரம் தோல்வியை சந்தித்திருந்தார். தொடர்ச்சியாக கட்சி ரீதியான கொள்கைகளில் நம்பிக்கையுடன் செயற்பட்ட அவர் ,இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்த ஆவது தமிழ் தலைவராக வரலாற்றில் அடையாளப் படுத்தப்படுகிறார். தந்தை செல்வாவின் பின்னர் எதிர்கட்சித் தலைவராக செயற்பட்ட தமிழர் என்ற கௌரவம் இரா. சம்பந்தனுக்கு உண்டு.
நீண்டகாலம் எதிர்கட்சித் தலைவர் பதவியை வகித்த தமிழ் தலைவராகவும் அவர் அடையாளப்படுத்தப்படுகின்றார். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் திகதி முதல் 2018ம் ஆண்டு டிசெம்பர் 18ம் திகதி வரை அவர் எதிர்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








