பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 70 வீதமாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான பாதிப்புகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் கூட்டறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
சம்பள அதிகரிப்பு தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் என முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானமானது, நாட்டின் தேயிலை மற்றும் ரப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும் என்பது எமது நம்பிக்கை. சிறு தேயிலை தோட்ட மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களை நிர்ப்பந்திக்கும் இந்த தற்போதைய முயற்சியானது, தொழில்துறையின் அடிப்படை செயல்பாட்டுத் தேவைகளைக் குறைப்பதன் மூலம் இத்தகைய நியாயமற்ற சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது மற்றும் இலங்கை முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதும், முதலாளிமார் சம்மேளனம் 1,380 ரூபா சம்பளத்தையே வழங்க முடியுமென திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலதிகமாக பறிக்கும் ஒரு கிலோ கொளுந்துக்கு 60 ரூபாவை வழங்க முடியுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.









