சைவ மங்கையர் வித்தியாலயத்தின் விஞ்ஞான ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த “வியனம் ’26” விஞ்ஞான தின நிகழ்வு செப்டம்பர் 25ஆம் திகதி பாடசாலை அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் தளவாடப் பொறியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. தில்லைஅம்பலம் சிவகுமார் மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் கிருபாலினி சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சைவ மங்கையர் கழகத்தின் உப தலைவரும், கழகத்தின் இசை மற்றும் நடனப் பாடசாலையின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி சீதா செல்லையா கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விஞ்ஞான ஒன்றியம், பொறுப்பாசிரியர் திருமதி தர்மசோருபன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் “வியனம் ’26” விஞ்ஞான தின சிறப்பு மலர் வெளியீடு, பயனுள்ள சிறப்புரை, மாணவர்களின் கவர்ச்சிகரமான நாடக நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. மேலும், விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களின் வெற்றிக்கு பங்களித்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாணவர்களிடையே விஞ்ஞான ஆர்வம், புத்தாக்க சிந்தனை மற்றும் சிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த “வியனம் ’26” நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது.









