ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, காலை நேரங்களில் பாடசாலை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நரிக் கூட்டங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
நரிகளின் நடமாட்டம் காரணமாக, மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் வழமைபோன்று விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், நாய்க்கடி உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, பாடசாலை வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நரிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் துரித நடவடிக்கை அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









