1,700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1,350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் எழுத்து மூலம் அறிவித்திருந்த யோசனையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நிராகரித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வர்த்தமானியூடாக அறிவித்த 1,700 ரூபா சம்பள உயர்வை வழங்க, முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத செவிசாய்க்காது கம்பனிகள் 1,200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் 150 ரூபா கொடுப்பனவுடன் 1,350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என எழுத்துமூலம் அறிவித்துள்ளன.
இந்நிலையில் கம்பனிகளின் குறித்த தீர்மானத்தை இ.தொ.கா ஏற்றுக்கொள்ளாதெனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1,700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும்.
சம்பள உயர்வு தாமதமானால் தோட்டங்களில் அமைதியின்மை ஏற்படும். இதனால் முகாமையாளர்களும் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். நாங்கள் கோரும் 1,700 ரூபா கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் தொழிலாளர்களின் போராட்டம் வலுப்பெறும் எனவும், 1,700 ரூபாவுக்கும் குறைவான கம்பனிகளின் எந்தவொரு முன்மொழிவையும் இ.தொ.கா ஏற்றுக்கொள்ளது.’ என இ.தொ.காவின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்









