உடுதும்பர சிறிய உலக முடிவை பார்வையிடச்சென்ற நிலையில் சுமார் 355 மீற்றர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை இராணுவ கொமாண்டோ படையினர் மீட்டுள்ளனர்.
வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் குறித்த பார்வையிடும் மையத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மத்திய மாகாண அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, 17 கொமாண்டோ படையினரை உள்ளடக்கிய குழுவொன்று நுவரெலியாவிலிருந்து சம்பவ இடத்துக்கு சென்றுள்ளது.
கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பின் ஊடாக விசேட மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்த படையினர், பல மணிநேர நடவடிக்கையின் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடுதும்பர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மெனிக்கின்ன, லுணுகெடியாமடித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









