இலங்கை ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பயன்படுத்திய மூன்று ஈட்டிகளும் விமானப் பயணத்தின்போது சேதமடைந்துள்ளன.
துருக்கியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு வந்தடைந்த பின்னர் கருத்து தெரிவித்த ருமேஷ், 90 மீற்றருக்கும் அதிகமான தூரங்களை எறிவதற்காக பல தடவைகள் பயன்படுத்திய தனது ஈட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
“இது விமான நிறுவனத்தின் தவறாக இருக்கலாம். ஆனால் நடந்தது நடந்துவிட்டது. இது பெரிய பிரச்சினையல்ல. நான் தொடர்ந்து முன்னேறுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ருமேஷ் தரங்கா இலங்கை தடகள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துவரும் வீரராவார். 2026 ஜூன் மாதம் ரோம் டைமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையைப் பதிவு செய்ததுடன், அந்த ஆண்டில் 90 மீற்றரை கடந்த முதல் வீரராகவும் சாதனை படைத்தார்.
மேலும், செப்டம்பர் 5ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் 89.04 மீற்றர் தூரம் எறிந்து வெற்றிபெற்ற அவர், இலங்கையின் முதல் டைமண்ட் லீக் சம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையையும் பெற்றுள்ளார்.
விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட ஈட்டிகளின் சேதம் குறித்து ருமேஷ் பெரிதாக கவலைப்படாமல், எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.









