மாற்றுத்திறன்கள் தமது கல்வி இலட்சியங்களுக்கு தடையாக அமைய விடாமல் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கௌரவிக்கும் “சரசவி திரியோ அபிமான்” விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கௌரவிக்கப்படுவதுடன், ஒவ்வொரு மாணவருக்கும் ஒருமுறை வழங்கப்படும் ரூ.100,000 புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதலாவது நிகழ்வு கொழும்பிலும், இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மூன்றாவது மற்றும் இறுதி நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட “சரசவி திரியோ அபிமான்” திட்டத்தின் ஊடாக இதுவரை சுமார் 400 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதையும், உடல் ரீதியான சவால்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக அமையக் கூடாது என்பதையும் வலியுறுத்திய பிரதமர், “கல்வியில் எவரும் பின்தங்க விடப்படமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.









