தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே, இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் தம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வன்முறைச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தாக்குதலுக்காக சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி, பாதுக்கை கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் வேறு ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இலக்கு தவறி குழந்தைகள் இருந்த வீட்டில் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









