மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி , 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் பெற்றது.
அணித்தலைவி பாத்திமா சனா 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி , தொடக்கத்தில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களும் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர்.
இறுதியில் நிலக்ஷிகா சில்வா 18 மற்றும் கௌஷினி நுத்யங்கன 10 ஓட்டங்களுடன் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
இலங்கை 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ச்சியாக 3ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இலங்கை தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், இந்தியா தனது 8-வது கிண்ணத்தைக் கைப்பற்றவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.









