ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில், நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாகப் புதிய வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
ஆனால், இதற்கு அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்து தனித்து நின்றது.
**மாற்றத்திற்கான காரணம் என்ன?**
கடந்த 1569-ம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டர் (Mercator) என்பவரால் உருவாக்கப்பட்ட பழைய வரைபடம் கடல் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
இதனால் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லும் வடக்குப் பகுதிகள் (ஐரோப்பா, வட அமெரிக்கா) பெரிதாகவும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற தெற்குக் கண்டங்களின் உண்மையான பரப்பளவு மிகச் சிறியதாகவும் சித்தரிக்கப்பட்டன.
உதாரணமாக, ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்து நாட்டை, ஆப்பிரிக்காவின் அதே அளவில் இந்த வரைபடம் காட்டி வந்தது.
இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் விதமாக, அனைத்துக் கண்டங்களின் உண்மையான பரப்பளவைச் சரியான விகிதத்தில் காட்டும் *ஈக்வல் எர்த்'(Equal Earth)** புதிய வரைபடத்தை ஐநா சபை அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிரிக்கா தனது நிஜ அளவிலான பிரம்மாண்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது.
**அமெரிக்காவின் கடும் எதிர்ப்பு ஏன்?**
இந்தத் தீர்மானத்திற்கு உலக நாடுகள் பெரும் வரவேற்பளித்த போதிலும், அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
உலக அமைதி, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற உண்மையான சர்வதேசப் பிரச்சினைகளைக் கையாள்வதை விட்டுவிட்டு, ஐநா சபை 16-ம் நூற்றாண்டு வரைபடங்கள் குறித்தும் அதுசார்ந்த விவாதங்களிலும் நேரத்தை வீணடிப்பதுதான் ஐநாவின் நம்பகத்தன்மை குறையக் காரணம் என்று அமெரிக்கப் பிரதிநிதி கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இந்த வரைபட மாற்றத்தின் பின்னணியில் ‘அக-நீதி’ (cognitive justice) மற்றும் காலனித்துவ இழப்பீடுகள் போன்ற அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
ஐநா சபையின் இந்தத் தீர்மானம் எந்தவொரு நாட்டின் மீதும் கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் புவியியல் ரீதியாகத் துல்லியமான புதிய வரைபடத்தைப் பயன்படுத்த இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பில் அமெரிக்கா எதிர்த்த நிலையில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விலகிக் கொண்டன.









