நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில்இ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 323ஆம் இலக்க பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தில் ஏற்பட்ட பரீட்சை தொடர்பான குழப்பம் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த மத்திய நிலையத்தில் இன்று (13) நடைபெறவிருந்த வணிகக் கல்வி, இசைஇ, நடனம் மற்றும் விவசாய அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாத்தாள் அடங்கிய கொள்கலனிற்குள் , நாளைய தினத்திற்கான சில பரீட்சைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாளைய நடைபெறவிருந்த ‘பௌதிகவியல் I’ பாடத்திற்குரிய 6 வினாத்தாள் கட்டளைப் பொதிகள் குறித்த கொள்கலனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வினாத்தாள் பொதிகள் 6 பரீட்சை நிலையங்களுக்குரிய வினாத்தாள் கொள்கலன்களில் இருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், அவை வெளியில் கசிந்து வெளியாகும் நிலை ஏற்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மறுநாள் நடைபெறவிருந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் அதற்கு முந்தைய நாளே பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு இவ்வாறு வந்து சேர்ந்திருப்பது தீவிரமான கவலைக்குரிய நிலைமையாகும்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.








