சர்வதேச தொழிலாளர் தினமான, நாட்டில் உழைக்கும் மக்களின் தினத்தை கொண்டாடும் தருணத்தில்,நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துஇ நாட்டின் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் திட்டமொன்றுக்கு முக்கிய அடியை எடுத்து வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது.
தற்போது நடைமுறையில் காணப்படும் காலாவதியான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தற்போது நடக்கும் அரசியல் சூதாட்டத்திலிருந்து விலகி,கொள்கை அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பும் மத்திய பாதையில், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் வழியாக முன்னோக்கிப் பயணிக்க தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மே தினம் தொடர்பாக விசேட அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பயணத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் சகல ஆதரவாளர்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் முற்போக்கான சகல மக்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மே 1ம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைவதற்கு ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.







