காணி உறுதிகள் இன்றி நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப் பகிர்ந்தளித்தார். தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பகிர்ந்தளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு ஜனாதிபதியின் கரங்களினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் காணி உறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் 75 வருடங்களாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லையெனவும் தற்போது சட்டபூர்வமாகவே அந்த உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் இது புரட்சிகரமான செயற்பாடுயெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போன்று கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படுமெனவும் அதனூடாக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கப்பெறுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.









