சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படவிருப்பதாக சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சர்வதேச தொடர்புகள், நிதிச் சட்டம், நிர்வாகம் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் தேவையான அறிவு குறித்த நிலையத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்நிலையத்தைத் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்பி (Dr.Jonathan Murph) மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளர் இங்கிரிட் வோல்கர் (Ms. Ingrid Walker) உள்ளிட்ட தூதுக் குழுவினரை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
– இலங்கை பாராளுமன்றம்.









