நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (28) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.









