அமெரிக்காவில் வீசிய கடும் புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக சுமார் ஒரு மில்லியன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு நியூஜெர்சி மாநிலத்திலும், நியூயோர்க் நகரின் சில பகுதிகளிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனமான ஃப்ளைட்அவேர் (FlightAware) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 2,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் தாமதமடைந்துள்ளன. மேலும், சுமார் 400 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க தேசிய வானிலை சேவை, வடக்கு ஜோர்ஜியா, மத்திய அட்லாண்டிக் பிராந்தியத்தின் பல பகுதிகள் மற்றும் நியூ இங்கிலாந்து பிராந்தியம் ஆகியவற்றுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்தத் திடீர் சீரற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவின் கிழக்குக் கரையோர மாநிலங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.









