நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் விஷத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் மதுபானத்தை அருந்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிக்போ மற்றும் ஐரெலே பகுதிகளில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிலருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதுபானத்தில் மெத்தனால் என்ற நச்சுப் பொருள் கலந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உள்ளூரில் தயாரிக்கப்படும் அதிக ஆல்கஹால் கொண்ட “Monkey Tail” எனப்படும் பானத்துடன் மெத்தனால் கலக்கப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், நச்சுப் பொருள் கலந்த மதுபானத்தை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், நோயாளிகளை கண்காணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் விஷச்சாராயத்தின் மூலத்தைக் கண்டறியும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.








