உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக மிருகக்காட்சிசாலைகளுக்குள் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி, தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியாகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, குறித்த அனைத்து நிறுவனங்களிலும் சிறுவர்களுக்காக பல்வேறு விசேட நிகழ்வுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் பொழுதுபோக்குடனும் நேரத்தை செலவிடுவதுடன், விலங்குகள் தொடர்பான அறிவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக சிறுவர் தினத்தில் தங்களுக்கு பிடித்த விலங்குகளை நேரில் கண்டு மகிழ்வதற்காக, சிறுவர்கள் அனைவரையும் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அன்புடன் அழைத்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி… சிறுவர்களுக்கான மகிழ்ச்சியான நாளாக மாற்றுவோம்!









