தேசிய எரிபொருள் அனுமதி முறையின் கீழ் எரிபொருள் வழங்கும் போது QR குறியீடு வழங்கப்பட்டாலும், எந்த காரணத்திற்காகவும் எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்கள் போன்ற வெளிப்புற கொள்கலன்களில் வழங்கப்படாது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருளைப் பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக சேவைகளை வழமைபோல் முன்னெடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் விநியோகஸ்தர்களிடம் எரிபொருள் இருப்புக்களை வழங்குமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இதனிடையே எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு குறித்த இடங்களில் பொலிஸார் அதிகளவில் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
QR குறியீடு அமைப்பு ஒவ்வொரு வாகன வகைக்கும் தேவையான அளவு எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதால் பொதுமக்கள் அச்சமடையத்தேவையில்லையென போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான டிஐஜி டிபிஜிஜே சேனதீரா தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லைனெவும், தேவையை நிர்வகிக்கவும், வரிசைகளைக் குறைக்கவும் மட்டுமே QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதெனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
உலக நிலைமை சீராகும் வரை எரிபொருளை கவனமாகப் பயன்படுத்தவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.









