கம்பளை , தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
வீதியை கடக்க முயற்சித்த பெண்கள் மீது வேகமாக பயணித்த கார் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே மூன்று பெண்களும் பலியானதோடு மற்றைய பெண் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விகாரையொன்றில் நடைபெற்ற பூரணை தின மத அனுஸ்டானங்களில் பங்கேற்றதன் பின்னர் வீதியில் பணித்துக்கொண்டிருக்கையிலேயே விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் பிரதேசம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குரிய காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார்.அவரிடம் சாரதி அனுமதி அட்டை இல்லையெனவும் சாரதி பயிற்சி அனுமதி பத்திரம் மாத்திரம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வருகைதந்த நிலையில் அவரது கணவரே ஆரம்பத்தில் காரை செலுத்தியுள்ளார். பின்னர் கணவர் , தனது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தின் போது குறித்த பெண் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்தியுள்ளதாவும் , அதன்போது கார் வேகமாக சென்று வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறி ஒன்றின் மீதும் மோதியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.









