உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி நண்பகல் 12 மணியுடன் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் சட்டத்தின் 28ஆவது உறுப்புரைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம், 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.









