நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிடமிருந்து நிதி வசதியின் கீழ் பெறப்பட்ட வாகனங்கள் அல்லது ஏனைய உபகரணங்களை, ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது, நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நிதி அல்லது குத்தகை ஒப்பந்தங்கள் தொடர்பில் பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, சில சந்தர்ப்பங்களில் வாகனங்களை மீளக் கைப்பற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், இவ்வாறான நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறைகள் பயன்படுத்தப்படக்கூடாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
வாகனத்தை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அது சட்டரீதியான நடைமுறைகள் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரும் தங்களது உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வாகனங்களை மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கைகளும் சட்டத்தின் வரம்புக்குள் இடம்பெற வேண்டும் என்பதே பொலிஸாரின் அறிவுறுத்தலாகும்.









