காலி – பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த குழுவினர், முச்சக்கரவண்டியை வழிமறித்து டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த இரு பெண்களில் ஒருவர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய பெண் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த பெண் பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றவியல் விசாரணைப் பிரிவில் கையொப்பமிடுவதற்காகச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









