சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு, அவரது தாயார் சவுதி அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச மனிதநேய அமைப்புகளிடமும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என் மகனை மன்னித்து, அவனது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அரச மன்னிப்பைப் பெற்றுத்தர வேண்டும். என் மகனின் உயிரைக் காப்பாற்றுங்கள்” என அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
“என் மகன் என் கண்முன்னே வளர்ந்தவன். இன்று அவனுக்கு மரண தண்டனை என்ற செய்தியை கேட்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு தாயாக நான் உயிருடன் மரணத்தை அனுபவிக்கிறேன். என் மகனை என்னிடமிருந்து பறித்துவிடாதீர்கள். அவனுக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்குங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “என் மகனுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும். அவன் மீண்டும் தனது தாயின் குரலைக் கேட்க வேண்டும். அவனை உயிருடன் மீண்டும் காண வேண்டும் என்பதே ஒரு தாயாக எனது ஒரே ஆசை” எனவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, முன்னதாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் பின்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்தத் தகவலுக்கு சவுதி அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் அவருக்கான அனைத்து சட்ட, இராஜதந்திர மற்றும் மனிதநேய வழிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தையும் சவுதி அரசாங்கத்தையும் சர்வதேச அமைப்புகளையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சவுதி அரசாங்கத்திடம் மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









