எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தீர்மானமிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (27) கூடவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் பாரிய சேவையை ஆற்றிவரும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக பொருளாதார அநீதிகளுக்குத் தீர்வு வழங்குவதை விடுத்து, குறைந்தபட்சம் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசாங்கம் தயாராக இல்லாத நிலைப்பாட்டிலேயே உள்ளது.
பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியிடம் 5 தடவைகளுக்கு மேலும், பிரதமரிடம் இரண்டு தடவைகளும், சுகாதார அமைச்சரிடம் மூன்று தடவைகளும் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் எவரும் பேச்சுவார்த்தை நடத்திப் பதிலளிக்கத் தயாராக இல்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நாம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதா, 30ஆம் திகதியா அல்லது வேறு தினத்திலா, எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இன்றே நாட்டு மக்களுக்கு அறிவிக்கத் தயாராக உள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.









