பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பஸ்சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பஸ் நிலையத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பஸ் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் உசனிலிருந்து இரண்டு தனியார் பஸ்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பஸ்சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பஸ்சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புதிய சேவையின் சிறப்பம்சமாக, மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்குப் பிரத்தியேக ‘டிஜிட்டல் அட்டை’ ஒன்று வழங்கப்படும். மாணவர் பஸ்ஸில் ஏறி குறித்த டிஜிட்டல் அட்டையைத் தொடுதிரையில் காண்பித்தவுடனேயே, அவர் பஸ்ஸில் ஏறிய நேரம் உள்ளிட்ட விவரங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாகச் சென்றடையும்.
அதேபோன்று, மாணவர் பஸ்ஸிலிருந்து இறங்கும்போதும் தொடுதிரையில் அட்டையைக் காண்பித்ததும், பாதுகாப்பாக இறங்கிய நேரத் தகவல் பெற்றோரின் தொலைபேசிக்குச் செல்லும்.
இதன் மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்படுகின்றது. மிகவும் முன்மாதிரியான இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை, தனியார் பஸ்ஸின் உரிமையாளரே தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.
வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் 2 சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மாகாணத்தின் ஏனைய இடங்களுக்கும் இந்த பஸ்சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









