கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் கல்வித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மீளாய்வின் ஊடாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு 2026 முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் சரியான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவுவும் அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்த எந்த எண்ணமும் எமக்கு இல்லையெனவும் குறித் பாடங்கள் கல்வித் துறையில் இருக்க வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாகவும், பாடசாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் பாடசாலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் , பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், பாடசாலைக்குள் நுழையும் ஒரு பிள்ளைக்கு உலகளாவிய கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி சீர்திருத்த முன்மொழிவுகள் மூலம் பாடத்திட்டம் திருத்தப்படுவதாகவும் அதற்கேற்றவகையில் பாடசாலை மாணவர்கள் கற்கின்ற பாடங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் வகையிலேயே பாடத்திட்டத்தை திருத்தி பரீட்சையை மையப்படுத்திய முறையை விட பிள்ளைகளுக்கு சுமையில்லாத நடைமுறைக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.









