ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பேருந்துகளுக்கான வீதிப் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமான முறையில் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 17ஆம் திகதி ரேணுக பெரேரா லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகள் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கு முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு புறம்பாக வழங்கியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த அனுமதிப்பத்திரங்களுக்கான வருடாந்தக் கட்டணங்களும் ஒரே தடவையில் அறவிடப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ரேணுக பெரேராவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









