வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் காவலரண் மீது இன்று நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் காவலரணை இலக்காக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட மேலதிக படையினர் இடையில் தாக்குதலுக்கு உள்ளாகியள்ளனர். அதன்போது கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக பாக்கிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் 2021 ல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஆப்கான் தாலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான TTP அமைப்பபென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
TTP தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.









