மன்னார் – சவுத்பார் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 3 டிங்கி படகுகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு பகுதிக்கு கொண்டு செல்லத் தயாராகயிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களுடன் கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









