வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், இளம் தந்தையும் ஒரு வயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த தாய், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று, காலை, புளியங்குளம் புதூர் பகுதியில் 207ஆவது மைல்கல் அருகில் விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம், சமளங்குளம் பகுதியிலுள்ள வயலில் நெல் விதைப்புப் பணிக்காக, அதிகாலை வேளையில் தந்தை, தாய் மற்றும் அவர்களது பச்சிளம் குழந்தை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது, முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மூவரும், மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலைப் பேருந்தில் ஏற்றப்பட்டு புளியங்குளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனினும், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்களை முந்திச் செல்லும்போது எதிரே வரும் போக்குவரத்தை அவதானித்து, பாதுகாப்பான இடைவெளியை உறுதிப்படுத்திச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.









