சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்காக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நான்கு பேர் கொண்ட இலங்கை சட்டக் குழு நாளை சவூதி அரேபியாவுக்கு பயணிக்கவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசார்ட் நவாவி மற்றும் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சவூதி அரேபியாவில் உள்ள உள்ளூர் சட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, அனோஜனின் வழக்கு தொடர்பான சட்ட நிலைமைகள் குறித்து குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
மேலும், சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான சட்ட நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் காலக்கெடு தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இந்த மேல்முறையீட்டை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனோஜனின் மரண தண்டனையை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் இராஜதந்திர முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சவூதி மன்னரிடம் கருணை கோரும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராசா அனோஜனின் வழக்கில், சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் அவரது மரண தண்டனையை மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.









