உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தேசிய உணவு மற்றும போசாக்குப் பாதுகாப்பை உருவாக்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு வழங்குதல் அரசின் முக்கிய பணியாவதுடன், ஒவ்வொரு பிரஜையின் குறைந்தபட்ச உணவுத் தேவை போதியளவிலும் தரப்பண்புடன் கூடியதுமான மலிவாகப் பெற்றுக் கொடுப்பதே அரசின் பிரதான நோக்கமாகும்.
புதிய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அதற்கான பல நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் உள்நாட்டில் உற்பத்தி செய்தல், குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதியளவு அத்தியாவசிய உணவு சுயபாதுகாப்புத் தொகையைப் பேணுதல், நாட்டில் காணப்படும் உணவு இருப்புத் தொடர்பான தரவுத் தொகுதியைப் பேணுதல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஏதுவான உற்பத்திகள், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் போன்ற செயன்முறைகளுக்குத் தனியார் துறையையும் பங்கெடுக்கச் செய்து பயனுள்ள வேலைத்திட்டம் அடையாளங் காணப்பட்டுள்ளது.
குறித்த பணிகளுக்கு அதிக கவனத்தைச் செலுத்துதல் உள்ளிட்ட நிறுவன ஒருங்கிணைப்பை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக் காப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி செயலகத்தின் மூலம் ஒருங்கிணைப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புபடும் அனைத்து நிறுவனங்களின் பங்கேற்புடன், தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலான விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வின் மூலம் கொள்கை வழிகாட்டலுக்காக
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்களின் இணைத் தலைமைத்துவத்திலும், மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களின் அங்கத்துவத்துடன் கூடிய ‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு’ ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.









